தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் ஒவ்வொரு டிசம்பரிலும் சுனாமி பற்றிய திகில் நினைவுகளும் வருவதை நாம் அறிவோம். பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக்கொண்ட கடல் மீதான அச்சம் இன்னும் குறைந்தபாடில்லை. எதிர்பாராத ஒரு கணத்தில் அடித்துச் சுருட்டி அள்ளிக்கொண்டு போன சுனாமியைவிடவும் மிகப்பெரிய ஆபத்து இப்போது தமிழகக் கடற்கரைப் பிரதேசத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கடலின் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அது. அதன் காரணமாக இந்தியாவில் மிக அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகப் போகிற மாநிலமாகத் தமிழ் நாடு இருக்கிறது என விஞ்ஞானிகள் அபாய சங்கு ஊதியிருக்கிறார்கள்.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டம் நாற்பது சென்டிமீட்டர் அளவுக்கு உயர்ந்துவிடும் என விஞ்ஞானிகள் மதிப் பிட்டிருக்கிறார்கள். ஆனால், மூன்று
முதல் ஐந்து மீட்டர் அளவு வரைகூட கடல் மட்டம் உயரலாம் என வேறு சில வல்லுநர் கள் கூறுகின்றனர். கடற்கரைப் பகுதிகள் மூழ்கிவிடும். இதனால் சுமார் எட்டுகோடி பேர் பாதிக்கப்படுவார்கள். வங்கதேசத்திலும், இந்தியாவிலும்தான் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கடல் மட்டம் ஒரு சென்டிமீட்டர் உயர்ந்தாலே இந்தியாவில் ஆறாயிரம் சதுர கிலோமீட்டர் மூழ்கிவிடும் என்கிறது ஒரு கணக்கு. இதனால் பாதிக்கப்படப்போவது கடற்கரையோர கிராமங்கள் மட்டுமல்ல... மும்பை, கொல்கத்தா, சென்னை முதலான நகரங்களும் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாகுமாம்! நிலப்பகுதி மூழ்குவது மட்டுமின்றி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல், நிலத்தடிநீர் உப்பு நீராக மாறிவிடுதல் போன்ற ஆபத்துகளும் இதனால் அதிகரிக்கும் என்கிறார்கள்.
கடல் மட்டம் இப்படி திடீரென்று அதிகரிக்கக் காரணம் என்ன? பூமியின் வெப்பம் அதிகமாகி வருவதே இதற்கு முக்கியக் காரணம். சுற்றுச்சூழலை மாசு படுத்துதல் போன்ற மனிதர்களின் பல்வேறு வகையான நடவடிக்கைகள் காரணமாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. கடந்த நூற்றாண்டில் சராசரியாக 0.6 டிகிரி அளவுக்கு பூமியின் வெப்பம் கூடியது. காற்றில் கலக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன் முதலான வாயுக்களின் விளை வாக பூமியின் உஷ்ணம் வேகவேகமாக கூடிக்கொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்து கிற வாகனங்களின் புகைதான் இதற்கு முதன்மையான காரணமாகும்.
பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் பல்வேறுவிதமான பருவநிலை மாற் றங்கள் ஏற்படும் என்று விஞ்ஞானி கள் பல ஆண்டுகளாகவே எச்சரித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ் நாட்டில் பெய்த காலந்தப்பிய மழை யால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகிப் போயின. விவசாயிகள் அந்தப் பேரிடியிலிருந்து இன்னும் மீள வில்லை. இந்த மழைக்கு புவிவெப்பம் அதிகரிப்பதுதான் காரணம். மழை மட்டுமல்ல, வறட்சியும் இதனால் அதி கரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோடையில் நாம் இதுவரை பார்த்திராத அளவுக்கு வெயில் உயரும் என்கிறார்கள். வெப்பக் காற்றுக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் உயரக்கூடும் என்பது விஞ்ஞானிகள் கணிப்பு.
பயமுறுத்த அல்ல... எச்சரிக்க!
அட்டைப்பட கிராபிக்ஸ், வாசகர்களை மிரட்டுவதற்காக அல்ல. நிலைமையின் தீவிரத்தைச் சொல்லவே! 'நாளை மறுநாள்?!' என்பது சில வருடங்களுக்கு முன் வந்த ஆங்கிலத் திரைப்படத்தின் பெயர். 'க்ளோபல் வார்மிங்' என்ற எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளாமல், 'எங்கோ பனிமலை உருகுதாம். நமக்கென்ன?' என்று அலட்சியமாக தவறு களைத் தொடர்கிற மனித வர்க்கத்துக்கு நிஜமாகவே இயற்கை தருகிற கடைசி தீர்ப்பு நாளைப் பற்றிய அறிவியல் கற்பனைப் படம் அது. நட்டநடு நகரத்துக்குள் கப்பல் வந்து மோதுவதும், ஆஸ்பத்திரிக்குள் துருவ ஓநாய்கள் இடம் மாறி வந்து உலாத்துவதுமாக... தாராளமாகவே பயமுறுத்தி, 'இயற்கையைப் பாழ்படுத்தாதே. அது பழிவாங்கினால் தாங்கமாட்டாய்' என்று ஒவ்வொரு தனிமனிதனையும் நிமிர வைக்கிற திரைப்படம் அது.
கார்பன் - டை - ஆக்ஸைடு ஓட்டப்பந்தயம்!
உலகில் கார்பன்-டை- ஆக்ஸைடு அதிகம் வெளி யேற்றுகிற நாடு எது என்பதில் ஒரு போட்டா போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. 'உலக போலீஸ்காரன்' அமெரிக்காதான் இந்த அசுத்தப் பந்தயத்தில் இப்போது நம்பர் ஒன்! ஆண்டுக்கு ஆறு பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடை அது வெளியேற்றுகிறது. இரண்டாம் இடம் சீனாவுக்கு. ஆண்டுக்கு ஐந்து பில்லியன் டன்! இன்னும் இரண்டு வருடங்களில் சீனா அமெரிக்காவை முந்திவிடும் என்கிறார்கள். 2030-ம் ஆண்டில் சீனா வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு 11 பில்லியன் டன்; அமெரிக்கா எட்டு பில்லியன் டன் இருக்குமாம்! அப்போது இந்தியாவுக்கு மூன்றாவது இடம் -- இரண்டு பில்லியன் டன்!
ஐரோப்பிய நாடுகளிலும் அகதிகள்!
இப்போது ஆசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்றவற்றிலிருந்து சென்ற அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர். ஆனால், கடல் மட்டம் உயர்வதால் அந்த நாட்டு மக்களில் பல கோடி பேரேகூட அகதிகளாக கடலிலிருந்து விலகி உள்நாட்டுக்கு ஓடும் நிலை வரக்கூடும்.
இப்போதுள்ள நிலை தொடர்ந்தால் கடல் மட்டம் 50 சென்டி மீட்டர் உயர்ந்தாலே போதும். எகிப்தில் 15 லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்வார்கள். அண்டார்டிகாவில் ஐஸ் உருகுவதால் இன்னும் இருபது ஆண்டுகளில் சுமார் ஒன்றரை கோடி பேர் ஐரோப்பிய நாடுகளில் இடம் பெயர்வார்கள்.
கன்னியாகுமரியின் கண்ணீர் கதை...
கன்னியாகுமரி மாவட்டம் 56 கிலோமீட்டர் நீள கடற்கரையைக் கொண்டது. சதுர கிலோமீட்டருக்கு 1500 பேர் வாழ்கிறார்கள். அந்த மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில்எண்பது சதவிகித ஊர்களில் இப்போது நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. எல்லாம் உப்பு நீராகி விட்டது. கடல் நீர் முன்னேறி நிலத்தடி நீரில் கலந்து குடிக்க முடியாததாக மாற்றி விட்டது.
இத்தகைய இயற்கை சீற்றங்களால் கடந்த பத்து வருடங்களில் 132 வகையான கடல் தாவரங்கள் அழிந்திருக்கின்றன. அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் என்ன நடக்குமோ என்று உயிரை கையில் பிடித்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் மீனவர்கள்!
என்ன செய்ய வேண்டும்?
கார்பன்-டை-ஆக்ஸைடைக் கட்டுப்படுத்த வாகனங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- ஒரு லட்ச ரூபாய் காரெல்லாம் ஒருவகையில் கொள்ளிக் கட்டையால் தலை சொறிகிற கதைதான்!
- அரசியல்வாதிகளின் பின்னால் மூன்று வாகனங்களுக்கு மேல் போகக்கூடாது என்ற தேர்தல்கால விதிமுறையை எல்லா காலத்துக்கும் கொண்டு வரலாம்.
- கட்சிகளின் மாநாடுகள், கூட்டங்கள், பேரணிகளுக்கு பேருந்துகளைத் தவிர வேறு வாகனங்களை அனுமதிக்கக் கூடாது.
- ஆட்டோக்களை எல்.பி.ஜி-க்கு கட்டாயம் மாற்றவேண்டும்.
- பேட்டரி கார்களை புழக்கத்தில் அதிகளவில் கொண்டு வர வேண்டும்.
- சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகளை மூடத் தயங்கக் கூடாது.
- மாற்று எரிசக்தியை ஊக்குவித்து நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.
சம்பளம் மட்டுமா முக்கியம்?
பேராசிரியர் சுதிர் செல்லராஜனோடு ஐ.ஐ.டி-யில் பேராசிரியராக இருக்கும் மிலிந்த் பிரமே அங்குள்ள மாணவர்களிடையே 'குளோபல் வார்மிங்' பற்றி விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம், ''நீங்கள் என்ன மாதிரியான விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்?'' என்று கேட்டோம்.
''இங்கே படிக்க வருகின்ற மாணவர்கள் பெரும்பாலும் எதிர்காலத்தில் என்ன வேலைக்கு எந்த நாட்டுக்குப் போவது என்பது பற்றியே சிந்திக்கிறார்கள். அவர்களிடம் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் 'குளோபல் வார்மிங்' பிரச்னை குறித்து சிந்தனைகளைத் தூண்டுகிறேன். அண்மையில்கூட ஒரு திரைப்பட விழாவை நடத்தினோம்.''
''என்ன மாதிரி திரைப்படங்கள்?''
''சில டாகுமென்ட்டரிகள், பஸ்த்ரா பாலிகார் என்றொரு பங்களாதேஷ் நாட்டு டாகுமென்ட்டரி படம். 'களிமண் பறவை' என்று ஒரு முழு நீள திரைப்படம். அதுவும் பங்களாதேஷ் டைரக்டருடையதுதான்!''
''மாணவர்கள் இதை வரவேற்கிறார்களா?''
''சிலர் ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த எட்டு ஒன்பது மாதங்களாக இதைச் செய்து வருகிறேன். இங்கு படித்துவிட்டுச் செல்லும் மாணவர்கள் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளை வகிக்கப் போகிறார்கள். கொள்கை முடிவுகளை எடுக்கப்போகும் அவர்கள் இப்படியான விஷயங்களைத் தெரிந்து கொண்டால்தான் சமூகப் பொறுப்போடு நடந்துகொள்ள முடியும். போபால் விஷவாயு சம்பவம் பற்றிக்கூட அவர்களிடம் பிரசாரம் செய்தோம். இந்த மாணவர்கள் ஒரு கம்பெனியை செலக்ட் செய்வதற்கு முன்பு அவர்கள் எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்று தன்னை மட்டுமே வைத்துப் பார்ப்பதைவிட அந்த கம்பெனி பொதுமக்களுக்கு கேடு விளைவிக்காத கம்பெனியா என்று சமூகப் பொறுப்போடு பார்க்கவேண்டும். அதற்காகத்தான் இந்த விழிப்பு உணர்வு பிரசாரம்!''
கடல்மட்டம் உயர்வதால் எவ்வளவு நஷ்டம்?
இருக்கிறபோது அருமை தெரியாமல் ஆட்டம் போட்டுவிட்டு, அழிவு வரும்போது அருமை உணர்ந்து கொட்டிக் கொடுக்கிற நமது தேக ஆரோக்கியம் மாதிரியேதான் இயற்கையும்.
'கடல்மட்டம் உயரும் போது கடல்நீர் நிலத்தடி நீருக்குள் புகும். அதனால் குடிநீரெல்லாம் உப்பு நீராக மாறிவிடும். விளைநிலங்கள் தரிசாகப் போகும். வெள்ளங்களை சமாளிப்பது, குடிநீருக்கு ஏற்பாடு செய்வது, நிலங்களை உப்பு நீக்கம் செய்வது என ஒவ்வொரு அரசாங்கமும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிட வேண்டியிருக்கும்.
ஒரு மீட்டர் அளவுக்கு கடல்மட்டம் உயர்ந்தால் அதை சமாளிக்க ஆண்டு ஒன்றுக்கு ஒரு கிலோமீட்டர் நிலத்தைக் காப்பாற்ற மட்டுமே இரண்டு கோடி ரூபாய் தொடர்ந்து செலவாகும்' என்கிறார் ஐ.ஐ.டி. பேராசிரியர் சுதிர் செல்லராஜன்.
வடமாநிலங்களில் பெருமளவில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறியிருப்பதும் நம்மை பயமுறுத்துகிறது. இமயமலையில் உள்ள பனிப்பாறைகளிலிருந்துதான் வடமாநிலங்களுக்குத் தண்ணீர் வருகிறது. கோடை காலங்களில் பனிப்பாறைகள் உருகும்போது வட மாநில மக்களுக்குத் தாகம் தீர்கிறது. பூமியின் வெப்பம் அதிகரிப்பதால், அந்தப் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகத் தொடங்கியுள்ளன. இதனால், முதலில் வெள்ளப் பெருக்கும் அதன்பிறகு வறட்சியும் உருவாகுமாம். பனிப்பாறைகள் இல்லாமல் போய்விட்டால் வடமாநிலங்களில் எண்பது சதவிகித மக்களுக்குக் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது.
பூமி வெப்பம் அதிகரிப்பதால் பருவமழை பொழிவதிலும் பெரிய மாற்றங்கள் உண்டாகும். இந்தியாவின் விவசாயம் பருவமழைகளையே அதிகம் சார்ந்திருக்கிறது. காற்றில் கலக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு இரு மடங்காக உயருமானால் அது பருவ மழை பெய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். அண்மையில் 'டெரி' என்ற அமைப்பும் 'சிஸரோ' என்ற அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்திய விவசாயம் என்னென்ன விதமான பாதிப்புகளுக்கு ஆளாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் சீதோஷ்ண மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக ராஜஸ்தானின் மேற்கு மாவட்டங்கள், தெற்கு குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா, ஆந்திராவின் வடபகுதி மற்றும் பீகாரின் தெற்குப் பகுதி ஆகியவற்றை அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, அங்கிருந்து மக்கள் லட்சக்கணக்கில் இடம்பெயர நேரிடும். இப்படிக் குடிபெயர்பவர்கள் நகரங்களுக்குப் பிழைப்புத் தேடிச் செல்லும்போது அங்கேயும் சிக்கல்கள் அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முன்னணி யில் நிற்கும் சர்வதேச அமைப்பான 'கிரீன்பீஸ்' நிறுவனம் சில நாட்களுக்குமுன் அறிக்கையன்றை வெளியிட்டுள்ளது. 'ப்ளூ அலர்ட்' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையைத் தயாரித்திருப்பவர் சென்னை ஐ.ஐ.டி-யில் பேராசிரியராகப் பணிபுரியும் சுதிர் செல்லராஜன். தென் ஆசிய நாடுகளில் இந்தப் புவி வெப்ப அதிகரிப்பால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை அவர் அந்த அறிக்கையில் விவரித்துள்ளார். குறிப்பாகக் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படப்போகும் ஆபத்துகளை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளிலும் சுமார் பதின்மூன்று கோடிபேர் தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவற்றில் பாகிஸ்தானைவிட மற்ற இரு நாடுகளில்தான் தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகை அதிகம். கங்கை-பிரம்மபுத்திரா டெல்டா பகுதி மிகவும் தாழ்வானதாக இருப்பதால் பங்களாதேஷ் அதிக ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறது. பங்களாதேஷில் தாழ்வான கடற்கரைப் பகுதிகளில் வாழ்பவர்களில் பெரும்பாலோர் கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவிலோ சுமார் மூன்றுகோடி பேருக்கு மேல் தாழ்வான கடற்கரைப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நகரங்களில் வசிக்கிறார்கள். கடல்மட்டம் உயரும்போது இந்தப் பகுதிகள்தான் முதலில் பாதிக்கப்படும்.
இப்படி இந்தியாவில் மட்டும் சுமார் ஆறரைகோடி பேர் கடல் மட்டம் உயர்வதால் பாதிக்கப்படுவார்கள் என சுதிர் செல்லராஜன் கூறுகிறார். அதில் ஒருகோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் என அவர் குறிப்பிடுகிறார். நீண்டகடற்கரையைக் கொண்ட மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து புலம்பெயரும் ஒருகோடி மக்கள் உள்நாட்டு அகதிகளாக மாற்று இடம் தேடுவார்கள் என சுதிர் செல்லராஜனின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடற்கரைப் பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்கள் மேட்டுப் பகுதிகளில் குடியேறும்போது அங்கே உணவுப் பற்றாக்குறை, தண்ணீர்ப் பஞ்சம், இடநெருக்கடி முதலிய பிரச்னைகள் அதிகரிக்கும். சென்னையிலிருந்து இடம் பெயர்கிறவர்களில் கணிசமானவர்கள் வேறு பெருநகரங்களைத் தேடிச்செல்லும்போது புதிய சிக்கல்கள் உருவாகும். அரசியல் ரீதியான மோதல்கள், பிராந்திய உணர்வு அதிகரித்தல் முதலியவை இன்னும் தீவிரமாகும். இதெல்லாம் கற்பனையிலேயே கவலையைக் கிளறும் விஷயங்கள்.
ஆம், கிராமப்புறங்களில் உணவு மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கும்போது மக்களுக்கிடையே மோதல்களும், வன்முறையும் பெருகும். அது மாநிலங்களுக் கிடையிலான மோதல்களாக, நாடுகளுக்கிடையிலான போர்களாகவும் உருவெடுக்கலாம். இதைப்பற்றி 'ஜெர்மன் அட்வைசரி கவுன்சில்' என்ற அமைப்பு கடந்த மே மாதத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் ராணுவரீதியான அச்சுறுத்தல்களை அது சுட்டிக்காட்டியிருக்கிறது. பங்களாதேஷில் ஏற்படப்போகும் பாதிப்புகளை சமாளிக்கும் சக்தி அந்த அரசாங்கத்திடம் இல்லை. எனவே, அந்த நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குள் அகதிகளாக தடைகளை மீறி தஞ்சம் புகுவார்கள் என அது எச்சரித்துள்ளது. அதுபோலவே, இந்திய-பாகிஸ்தான் முரண்பாடுகளும் இதன் காரணமாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடலை நம்பி வாழும் மீனவ மக்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய அரசின் தாராளமய பொருளாதாரக் கொள்கையும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டி ருக்கின்றன. அப்படிப்பட்ட சூழலில் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படப்போகும் பாதிப்பை அவர்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் எனத் தெரிய வில்லை. சுனாமிக்குப் பிறகு கடல் நீரின் ஓட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக கன்னியாகுமரி பகுதியைச் சார்ந்த மீனவர்கள் ஆழமான பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப் போகிறவர்களை சிங்களை கடற்படை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மீனவர் களைக் காப்பாற்றவேண்டிய இந்திய அரசோ, தமிழக மீனவர்களைக் குற்றவாளிகளாக சித்திரித்து ரணத்தில் உப்பைத் தடவுகிறது.
பூமி வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உலக நாடுகள் ஒன்றிணைந்து போட்ட 'கியோட்டோ' ஒப்பந்தம் பத்தாண்டுகள் கடந்தும் நடைமுறைக்கு வரவில்லை. வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளரும் நாடுகளும் ஒன்றையன்று குற்றம் சாட்டிக்கொண்டு காலங்கடத்துகின்றன. கோபன்கேகனில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடியலாம் என ஐ.நா. சபை இப்போது கவலை தெரிவித்துள்ளது. பாங்காக்கில் இந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை. காற்றில் கலந்துள்ள மாசின் அளவை 1990-ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலைக்குக் குறைப்பது என்பதுதான் கியோட்டோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். அந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஆனால் இந்தியாவும், சீனாவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்தவேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பணக்கார நாடுகள்தான் காரணம், எனவே, இதை சீர்படுத்துவதற்கான பொறுப்பை அவைதான் ஏற்கவேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் வாதம்.
அமெரிக்காவின் பாரபட்சமான அணுகுமுறையை எதிர்த்து இந்தியாவோ பிறநாடுகளோ எடுத்து வைக்கும் வாதங்கள் சரிதான். ஆனால், நமது நாட்டில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பாதிப்புகளை சரிசெய்ய நாம்தானே நடவடிக்கை எடுக்கவேண்டும்? அமெரிக்காவை ஒப்பிடும்போது காற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவின் பங்கு குறைவுதான் எனினும் கடந்த இருபது ஆண்டுகளில் இங்கு ஏற்பட்டுள்ள தொழிற்பெருக்கத்தாலும், வாகனங்களின் உயர்வினாலும் நாம் வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு ஐம்பது விழுக்காடு அதிகரித்துள்ளது. பூமியின் வெப்பத்தை அதிகரிக்க செய்கின்ற பசுமைக்குடில் வாயுக்களை (Green house Gases) வெளியேற்றுவதில் இந்தியாவின் பங்கு உயர்ந்து வருகிறது. 2015--ம் ஆண்டில் உலகின் மூன்றாவது மாசுபடுத்தும் நாடாக இந்தியா இருக்கும் என்கிறார்கள்.
அரசியல்தளத்தில் அமெரிக்காவின் விசுவாசியாகவும், ராணுவ தளத்தில் அதன் கூட்டாளியாகவும் இருக்கிற இந்தியா, பொதுமக்கள் நலன் என்று வரும்போது மட்டும் அமெரிக்க எதிர்ப்பு முகமூடியைப் போட்டுக்கொள்வது நம்மை ஏய்ப்பதற்காகத்தான். கடல் மட்டம் உயர்ந்து வருவதால் வாழ்வாதாரப் பாதிப்புக்கு ஆளாகும் மீனவ மக்களின் நலன்களைக் காக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இங்கு காற்றில் கலக்கும் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ரசாயனத் தொழிற்சாலைகளையும், வாகனப் பெருக்கத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்தால் உருவாகப்போகும் உள்நாட்டு அகதிகளை எப்படி மறுகுடியமர்த்தம் செய்வது என்பது குறித்து நம்முடைய அரசாங்கங்கள் இப்போதே சிந்திக்கவேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எத்தனையோ நாடுகள் முன்வந்தன. அப்படி இப்போது எவரும் முன்வர மாட்டார்கள். தமிழ்நாட்டைக் கடல்கொள்ளும் முன்பாகத் தமிழக, இந்திய அரசுகள் விழித்துக் கொண்டால் நல்லது!